கோலாலம்பூர், பிப் 17 – நாட்டில் இனவாதமும், இனங்களுக்கிடையிலான பாகுபாடும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தமளிப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
இனவாதமான செயல்களும், வார்த்தைகளும் நாட்டின் ஒற்றுமையைச் சீர்குழைக்கும். எனவே, அச்செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்றார்.
சோளம் விற்பவர், இந்தியர்களை தவறாக அடையாளப்படுத்திய சம்பவம் தொடர்பில் அமைச்சர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அச்சம்பவம் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கோபிந்த் வலியுறுத்தினார்.
இன, மத, மொழி வேறுபாடு இன்றி ஒவ்வொரு தனிமனிதனும் இந்நாட்டில் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். இதற்கு மலேசியர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.
ஒற்றுமையும், பரஸ்பர மரியாதையும் மலேசியர்களை வழிநடத்தும் முக்கியக் கொள்கையாக அமைந்தால் மட்டுமே வளமான, சுபிட்சமான நாடாக மலேசியா தொடர்ந்து நிலைக்க முடியும் என்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.


