ஷா ஆலம், பிப். 17 - கிள்ளான், ஜாலான் புக்கிட் செராக்காவில் காருக்கும் போலீஸ் லாரிக்கும் இடையே இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் எதிரொலியாக காரில் தீ ஏற்பட்ட நிலையில் போலீஸ் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் கார் ஓட்டுநரின் தீக்கிரையாவதிலிருந்து தெய்வாதீனமாக உயிர்த்தப்பினார்.
இந்த சம்பவத்தில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உட்பட நான்கு பேர் சம்பந்தப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
இச்சம்பவம் குறித்து காலை 6.40 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காப்பார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஆறு தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டாக அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை அடைந்த போது இவ்விபத்தில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்தது என்று அவர் சொன்னார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து டிரக்கில் பயணித்த காவல்துறை அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிவதற்குள் கண்ணாடி ஜன்னலை உடைத்து சுயநினைவுடன் இருந்த ஓட்டுநரை மீட்டனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 56 வயதான கார் ஓட்டுநர் மற்றும் போலீஸ் டிரக் ஓட்டுநருக்கு முறையே கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட வேளையில் மற்ற இரண்டு போலீஸ்காரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன என்றார் அவர்.
இச்சம்பவத்தின் போது போலீஸ் டிரக்கை அதன் ஓட்டுநர் வாகனத்தை விரைவாக பின்னோக்கி நகர்த்தி அது தீக்கிரையாவதிலிருந்து காப்பாற்றினார்.
இவ்விபத்தில் காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காகக் கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


