கோலாலம்பூர், பிப். 17- போலீஸ் நன்னடத்தை நெறிமுறை மீதான
சுயேச்சை ஆணையத்தின் (ஐ.பி.சி.சி.) அடைவு நிலை மற்றும் ஆசியான்
தலைவர் பதவியை வகிக்கும் காலத்தில் மலேசியா எடுக்கும் வியூக
நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய மக்களவைக்
கூட்டத்தில் கேள்வி எழுப்பப்படும்.
ஐ.பி.சி.சி. தொடங்கப்பட்டது முதல் கடந்தாண்டு இறுதி வரையிலான
காலக்கட்டத்தில் அந்த அமைப்பின் அடைவு நிலை மற்றும் ஐ.பி.சி.சி.,
போலீஸ், நண்பர்கள் மற்றும் பங்காளிப்பாளர்கள் (ஐ.பி.எப்.சி.) அமைப்பு
ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கோத்தா மலாக்கா பக்கத்தான்
ஹராப்பான் உறுப்பினர் கூ போய் தியோங் உள்துறை அமைச்சரிடம்
கேள்வியெழுப்புவார்.
வட்டார சங்கிலித் தொடர் மதிப்பை வலுப்படுத்துவது, உறுப்பு நாடுகளின்
அடித்தளத்தை வலுப்படுத்துவது, ஆசியான் நாடுகளின் பொருளாதாரத்தை
ஒருமுகப்படுத்துவது மற்றும் சீரமைப்பது ஆகிய மூன்று வியூகங்களை
அடைய ஆசியான் தலைவர் பதவியை வகிக்கும் 2025ஆம் ஆண்டில்
மலேசிய எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கெமமான் தொகுதி
பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது சம்சரி
மொக்தார் உள்துறை அமைச்சரிடம் வினா தொடுப்பார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் சமையல் எண்ணெய் விலை நிலைத்தன்மை
திட்டத்திற்காக வழங்கப்பட்ட உதவித் தொகையின் மதிப்பு குறித்து
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சரிடம் ராசா
தொகுதி ஹராப்பான் சா கீ சின் வினவுவார்.
மானிய விலை சமையல் எண்ணெய் தட்டுபாடு குறித்து பொதுமக்கள்
மத்தியி அடிக்கடி புகார் எழுவதால் இத்தகைய மானிய விலை பாக்கெட்
சமையல் எண்ணெய்க்கான கோட்டாவை 60,000 டன்னுக்கும் மேல்
உயர்த்தும் சாத்தியம் குறித்தும் அவர் கேள்வியெழுப்புவார்.
கேள்வி பதில் அங்கத்திற்குப் பிறகு மாட்சிமை தங்கிய பேரரசரின் அரச
உரை மீதான விவாதம் தொடரும் இந்த மக்களவைக் கூட்டத் தொடர்
வரும் மார்ச் 6ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு நடைபெறும்.


