வாஷிங்டன், பிப் 17: அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள இந்துகள் தைப்பூசத் திருநாளை விமரிசையாகக் கொண்டாடினர்.
வாஷிங்டனில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் மூன்று நாள்களாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள இந்துக்களை ஒன்றிணைக்கும் விழாக்களில் இந்த தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும்.
42 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் தைப்பூசக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் கூட்டம், ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவதாக ஆலயத் தரப்பினர் குறிப்பிட்டனர்.
''இந்தக் கோவில் இன்னும் சிறந்த முறையில் மேம்பாடு கண்டு, மக்களுக்கு பலனளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்,'' என்று ஆலயத்தின் தோற்றுநர் குருசாமி தெரிவித்தார்.
''இந்த கோவில்ல நடைபெறும் முக்கியமான விழாக்களில் இதுவும் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் மக்கள் அதிகமாக வருகின்றனர்,'' என்று ஆலயத் தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார் கூறினார்.
''வாஷிங்டனில் வாழை இலையில் உணவு பரிமாறுவது இந்த ஆலயத்தில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 1,500 பேருக்கு வாழை இலை உணவு வழங்கப்படுகிறது,'' என்று ஆலயத் துணை தலைவர் கணேஷ்வரன் நாதன் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் 10 அல்லது 20 பேர் மட்டுமே தைப்பூசத்தில் கலந்து கொண்ட வேளையில், தற்போது ஆயிரத்தில் இருந்து 1,500 பேர் வரை கலந்து கொள்கின்றனர்.
33 ஆண்டுகளாகக் கொண்டாடப்படும் இத்திருவிழாவில், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, வட கரோலினா, கனடா, பிலாடெல்பியா போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கலந்து கொள்கின்றனர்.


