லிம்பாங், பிப். 17- தன் உறவினருடன் மீன் பிடிக்கச் சென்ற முதியவர்
ஒருவர் நீரில் மூழ்கி மாண்டார். அவரின் உடல் கம்போங்
பூலாவ் புருணை அருகே நேற்று கண்டு பிடிக்கப்பட்டது.
அறுபத்திரண்டு வயதான அத்தின் இஷிக் என்ற அந்த முதியவரின்
சடலத்தை அவரின் உறவினர்கள் கண்டுபிடித்ததாக சரவா மாநில
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையப் பேச்சாளர்
கூறினார்.
எனினும், அவரின் உறவினரான ஜோர்டிசோன் ஜாமிட் (வயது 16) என்பவர்
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
அவ்விருவரும் கடந்த சனிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில்
மீன்பிடிப்பதற்காக கம்போங் பூலாவ் புருணை அருகிலுள்ள ஆற்றுக்குச்
சென்றதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
முதியவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில் நேற்று பிற்பகல்
1.300 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாகவும் 70 கிலோ மீட்டர்
தொலைவிலுள்ள சம்பவ இடத்திற்க லிம்பாங் தீயணைப்பு நிலையத்தைச்
சேர்ந்த குழு விரைந்ததாகவும் அப்பேச்சாளர் சொன்னார்.
காணாமல் போன பதின்ம வயது இளைஞரைத் தேடும் நடவடிக்கையில்
கிராம மக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


