தாவாவ், பிப். 17- தேசிய கடவ் எல்லைப் பகுதிக்கு 9.6 டன் சீனியை சரக்கு படகில் கடத்த முயன்ற ஆடவர் ஒருவரை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (மெரிடைம் மலேசியா) நேற்று இங்குள்ள பத்து தீகாவுக்கு தெற்கே 2.4 கடல் மைல் தொலைவில் கைது செய்தது.
ஓப் புளூட்டோ தீமோர் மற்றும் ஓப் திரிஸ் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த தங்கள் தரப்பினர் நேற்று காலை 8.30 மணியளவில் சுங்கை தாவாவ் திசையிலிருந்து நாட்டின் தேசிய கடல் எல்லையை நோக்கி சந்தேக நபரின் சரக்கு படகு செல்வதைக் கண்டதாக தாவாவ் கடல்சார் மண்டல இயக்குநர் கேப்டன் ஷாரிசான் ராமான் கூறினார்.
அந்த ஆடவரிடம் நடத்தப்பட்ட ஆவணச் சோதனையில் அந்த நபர் தாம் எடுத்துச் சென்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுடன் தொடர்புடைய எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார். மேலும், அந்தப் பொருட்கள் பிரகடனப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. அதோடு மட்டுமின்றி படகு உரிமத்தில் சந்தேக நபரின் பெயர் பதிவு செய்யப்படவில்லை என்பதும் ஒரு சோதனையில் தெரியவந்தது என அவர் சொன்னார்.
சரக்கு படகில் நடத்தப்பட்ட விரிவானச் சோதனையில் தலா ஒரு கிலோகிராம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட 9,600 கிலோகிராம் சீனி கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஆடவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு உட்பட மொத்த பொருள்களின் மதிப்பு ஏறக்குறைய 60,000 வெள்ளியாகும் என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு 1967 ஆம் ஆண்டு சுங்கச் சட்டம், 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் சபா துறைமுகங்கள் மற்றும் துறைமுகத் துறை சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக ஷாரிசான் கூறினார்.
இதற்கிடையில், குற்றவியல் துஷ்பிரயோகம் குறித்து ஏதேனும் தகவல் உள்ள பொதுமக்கள், பாதுகாப்புப் படை அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சியாக தாவாவ் கடல்சார் மண்டல செயல்பாட்டு மையத்தை 089-752116 என்ற எண்ணில் அல்லது அவசர தொலைபேசி எண் 999இல் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


