கோத்தா பாரு, பிப். 17- அண்மையில பாசீர் மாஸ், கம்போங் தாசேக்
பெரிங்கினில் திருமண வீட்டில் நுழைந்து 2,500 வெள்ளியைத் திருடியதாக
சந்தேகிக்கப்படும் 61 வயது மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த மூதாட்டியுடன் 62 வயதுடைய ஆடவர் ஒருவரும் கைது
செய்யப்பட்டதாக பாசீர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கமா
அஸூருள் முகமது கூறினார்.
டாக்சியில் பயணித்த அவ்விருவரையும் இங்குள்ள ஜாலான் ஸ்ரீ
செமெர்லாங்கில் நேற்று மாலை 5.04 மணியவில் போலீசார் சந்தேகத்தின்
பேரில் தடுத்து வைத்ததாக அவர் சொன்னார்.
கிளந்தான், திரங்கானு மற்றும் பேராக்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்டது
தொடர்பான பத்து முந்தையப் பதிவுகளைக் கொண்டுள்ள அந்த மாது
வீடொன்றில் நடைபெற்ற திருமண விருந்தின் போது 2,500 வெள்ளியைத்
திருடியதை ஒப்புக் கொண்டார் என அவர் தெரிவித்தார்.
அந்த மாதுவை விசாரணைக்காக குற்றவியல் சட்டத்தின் 380வது பிரிவின்
கீழ் தடுத்து வைப்பதற்கான நீதிமன்றம் அனுமதி இன்று பெறப்படும் என
அவர் சொன்னார்.
இம்மாதம் 1ஆம் தேதி பாசீர் மாஸ், கம்போங் தாசேக் பெராங்கானில்
உள்ள வீடொன்றில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்வில் விருந்தினர்
போல் கலந்து கொண்ட மாது ஒருவர் வீட்டின் கழிப்பறையைப்
பயன்படுத்துவது போல் பாசாங்கு செய்து 2,500 வெள்ளியைக்
கொள்ளையிட்டுத் தப்பியது தொடர்பில் 59 வயது ஆடவர்
ஒருவரிடமிருந்து போலீசார் புகாரைப் பெற்றனர். இந்த திருட்டுச்
சம்பவத்தைச் சித்தரிக்கும் 38 வினாடி சி.சி.டி.வி. காணொளி சமூக
ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.


