கோலாலம்பூர், பிப்.15- பொதுமக்களிடையே குழப்பத்தையும் மனக் கிலேசத்தையும் ஏற்படுத்தக்கூடிய தவறான மற்றும் புண்படுத்தும் உள்ளடக்கத்தைப் பதிவேற்றியதாக சந்தேகிக்கப்படும் எட்டு ஆடவர்களிடம் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
அந்த உள்ளடக்கங்கள் அரச ஸ்தாபனம் குறிப்பாக மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும் ஆட்சியாளர்களின் மாநாடு மீது வெறுப்பையும் அவமரியாதையையும் தூண்டும் வகையில் உள்ளதாகக் கருதப்படுவதாக எம்.சி.எம்.சி. ஒரு அறிக்கையில் கூறியது.
பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. இந்த சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 50,000 வெள்ளி அபராதம் அல்லது ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
கோலாலம்பூர், திரங்கானு, கெடா, கிளந்தான், பெர்லிஸ் மற்றும் பகாங் ஆகிய ஆறு மாநிலங்களில் விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு உதவும் வகையில் வழக்கு தொடர்பான எட்டு விவேகக் கைப்பேசிகள் மற்றும் எட்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வழக்கை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைப் பெற அந்த உபகரணங்களில் தடயவியல் பகுப்பாய்வு நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி சேவைகளில் எந்தவொரு உள்ளடக்கத்தையும் பதிவேற்றும்போது பொறுப்பான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு அந்த ஆணையம் பொதுமக்களுக்கு நினைவூட்டியது.


