குவாந்தான், பிப். 15- கடந்த வியாழக்கிழமை தஞ்சோங் லும்பூர் பாலம் அருகே ஆற்றங்கரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் வர்த்தகரின் கொலை தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேக நபர் இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் மேலும் விசாரணை நடத்த அனுமதிக்கும் வகையில் 53 வயதான அந்நபருக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் நோர் இஸ்ஸாட்டி ஜகாரியா பிறப்பித்தார்.
அந்த சந்தேக நபர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திரங்கானு மாநிலத்தின் கோல திரங்கானுவில் உள்ள வகாஃப் தெம்புசு கோங் பாடாக் குடியிருப்புப் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார் .
விசாரணைக்கு உதவும் வகையில் ஒரு மோதிரம், பணம், ஆடைகள் மற்றும் ஆவணங்களும் அந்நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, அப்பெண்ணின் மரணத்திற்கு கனமான அல்லது மழுங்கிய பொருளால் தலையில் அடிக்கபட்டதுதான் காரணம் என்பது பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக இதற்கிடையில், குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் முகமது ஜஹாரி வான் புசு கூறினார்.
அப்பெண்ணின் மரணம் குறித்து பொதுமக்கள் எந்த ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் சொன்னார்.
முன்னதாக, பிப்ரவரி 13 ஆம் தேதி தஞ்சோங் லம்பூர் பாலம் அருகே ஆற்றங்கரையில் நோர்ஷமிரா ஜைனல் (வயது 37) என்ற உள்ளூர் பெண் உணவு வியாபாரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் உடலில் குற்றவியல் கூறுகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.


