புத்ராஜெயா, பிப். 15- சொஸ்மா எனப்படும் 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றச் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் மறுஆய்வு செய்யப்பட்டு அதில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்தார்.
இந்தச் சட்டத்தின் மறுஆய்வு மற்றும் மேம்பாடு தொடர்பான விவரங்களை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைப்பார் என்று மடாணி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளருமான ஃபாஹ்மி தெரிவித்தார்.
சொஸ்மா சட்டத்தை மேம்படுத்துவது அல்லது திருத்துவது தொடர்பாக கொள்கையளவில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. என்று அவர் தகவல் தொடர்பு அமைச்சரின் வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அமைதியான முறையில் பேரணிகளை நடத்த விரும்பும் அமைப்புகள் அல்லது குழுக்களின் நோக்கங்களை எளிதாக்கும் வகையில் 2012 ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டத்தை மேம்படுத்துவதற்கான திருத்தங்களையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் அவ்வப்போது சட்டங்களை மறுஆய்வு செய்கிறது, அவசியமானால் அல்லது மேம்படுத்த முடிந்தால் இந்த முயற்சி தொடரும் என்று அவர் கூறினார்.


