அலோர்ஸ்டார், பிப். 15- மலாக்கா நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆசியான் நாடுகள் குறிப்பாக மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் அணுக்கமான ஒத்துழைப்பு அந்த வியூக முக்கியத்துவம் வாய்ந்த கடல் பாதைக்கு வலுவான அரணாகத் திகழ்கிறது.
மலேசியாவின் கோல லிங்கிக்கும் இந்தோனேசியாவின் ருப்பாட் தீவுக்கும் இடையே 15 கடல் மைல் (27.28 கிலோமீட்டர்) தொலைவு மட்டுமே இடைவெளியைக் கொண்ட இந்த கடல் பகுதியைப் பாதுகாப்பதில் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் (மெரிடைம் மலேசியா) மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் பிரிவு அதிகச் சவால்களை எதிர்கொள்கிறது.
இந்த குறுகிய இடைவெளியில் அதிசக்தி வாய்ந்த படகுகளைப் பயன்படுத்துவதன் மூலம் முப்பதே நிமிடங்களில் எல்லை கடந்த கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதன் காரணமாக இப்பகுதி சட்டவிரோதக் கும்பலிகளின் தேர்வுக்குரிய இடமாக விளங்குகிறது.
இருப்பினும், பிராந்திய அமைப்பு என்ற முறையில் இப்பிரச்சினைகளை ஆசியான் கையாள முடியும். மலேசியா-இந்தோனேசியா இடையிலான உளவு மற்றும் கூட்டு நடவடிக்கைகள் இதற்கு சான்றாக விளங்குகின்றன.
விரைவான தகவல் பரிமாற்றம் மற்றும் துரித அமலாக்க நடவடிக்கைகள் காரணமாக போதைப் பொருள், சிகிரெட் கடத்தல் மற்றும் அந்நிய மீனவர்களின் அத்துமீறல் போன்ற குற்றச்செயல்களை முறியடிக்க முடிகிறது.
கடந்த 2022 முதல் 2024 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பல்வேறு குற்றங்களுக்காக 138 பேர் கைது செய்யப்பட்டதோடு ஒரு கோடி வெள்ளி மதிப்புள்ள பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக மெரிடைம் மலேசியாவின் மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மாநில இயக்குநர் கெப்டன் முகமது கைரி அப்துல் அஜிஸ் கூறினார்.
அந்த நடவடிக்கைகளில் 121 சட்டவிரோத அந்நியக் குடியேறிகளை ஏற்றி வந்த 11 படகுகள் பறிமுதல் செய்யபட்டது 29.6 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சிகிரெட்டுகளை கடத்தி வந்த ஆறு இயந்திரங்கள் கொண்ட இரு அதிவிரைவு படகுகள் கைப்பற்றப்பட்டது ஆகியவையும் அடங்கும் என அவர் தெரிவித்தார்


