குவாந்தான், பிப். 15- கடந்த வியாழக்கிழமை தஞ்சோங் லும்பூர் பாலம் அருகே ஆற்றங்கரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் உணவு வியாபாரியின் கொலையில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐம்பத்து மூன்று வயதான சந்தேக நபர் இன்று காலை 5.30 மணியளவில் கோல திரங்கானு, வகாஃப் தெம்புசு கோங் பாடாக் வீடமைப்புப் பகுதியில் போலீஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டதாக குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் முகமது ஜஹாரி வான் புசு கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் மேலும் விசாரிப்பதற்கு ஏதுவாக வேலையில்லாத அந்த சந்தேக நபரை காவலில் வைக்க இன்று குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விண்ணப்பம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவும் வகையில் ஒரு மோதிரம், பணம், உடைகள் மற்றும் ஆவணங்களும் அவ்வாடவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.
இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதன் மூலம் உணவு வியாபாரியான அப்பெண்ணின் கொலை தொடர்பான வழக்கிற்கு போலீசார் தீர்வு கண்டுள்ளனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்ய உதவியதற்காக திரங்கானு போலீஸ் தலைமையகத்திற்கு பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் நன்றி தெரிவித்தார்.
கடந்த 13ஆம் தேதி தஞ்சோங் லும்பூர் பாலம் அருகே ஆற்றங்கரையில் உள்நாட்டைச் சேர்ந்த பெண் உணவு வியாபாரியான நோர்ஷமிரா ஜைனல் (வயது 37) என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
பாதிக்கப்பட்டவரின் உடலில் குற்றவியல் தன்மைகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும் யஹாயாவின் கூறியிருந்தார். பாதிக்கப்பட்டவரின் உடலில் காயத்திற்கான அறிகுறிகள் தென்பட்டதோடு அந்தப் பெண்ணின் நகைகளும் காணாமல் போயிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது என அவர் சொன்னார்.


