கோலாலம்பூர், பிப் 15- காஸா மண்ணிலிருந்து பாலஸ்தீன மக்களை ‘விரட்டும்‘ முயற்சியை எதிர்ப்பதில் மலேசியாவும் எகிப்தும் ஒருமித்தக் கருத்தைக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சுதந்திர பாலஸ்தீன தேசத்தை உருவாக்கும் முயற்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று அவ்விரு நாடுகளும் கருதுகின்றன.
எகிப்திய அதிபர் அப்டில் ஃபாத்தா எல்-சிஸியை நேற்று தாம் தொடர்பு கொண்ட போது இந்த கருத்தினை வெளியிட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான, மருத்துவ மற்றும் மறுநிர்மாணிப்பு உதவிகளோடு நீதி கிடைப்பதற்கு அந்நாடு நடத்தி வரும் போராட்டத்திற்கும் ஆதரவளிக்கும் மலேசியாவின் நிலைப்பாட்டை தாம் மறுவுறுதிப்படுத்தியதாக அவர் சொன்னார்.
பாலஸ்தீனத்திற்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வரும் மற்றும் அந்நாட்டிற்கு உதவி மற்றும் மருத்துவப் பொருள்களை வழங்கும் மலேசியாவின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் எகிப்திய அதிபருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொண்டேன் என்று சமூக ஊடங்களில் வெளியிட்டப் பதிவில் அன்வார் குறிப்பிட்டார்.
பாலஸ்தீன மேம்பாட்டிற்கான கிழக்காசிய ஒத்துழைப்பு முன்னெடுப்பின் வாயிலாக காஸாவை மேம்படுத்த மலேசியாவும் ஜப்பானும் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எல்-சிஸி நன்றியைப் புலப்படுத்தியதாக அவர் கூறினார்.
பாலஸ்தீனத்திற்கு உதவும் முயற்சிகளுக்கு மேலும் பல நாடுகள் உதவி வழங்கினால் அம்முயற்சி ஆக்ககரமான பலனைத் தரும் என்றும் அவர் சொன்னார்.


