ஷா ஆலம், பிப் 14: சபாக் பெர்ணமில் உள்ள கத்ரி எஸ்டி தோட்டப் பகுதியில் திரியும் கால்நடைகளைப் பிடிக்கும் நடவடிக்கையை இரண்டு நாட்கள் மாநில அரசு செயல்படுத்தி வந்தது.
தோட்டத்தில் கால்நடைகளை சுதந்திரமாக வளர்க்கும் நடவடிக்கை உள்ளூர்வாசிகளுக்குப் பல்வேறு பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தியுள்ளன என ஊரக வளர்ச்சி ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் கூறினார்.
“இந்த நடவடிக்கையால் தோட்டப் பகுதியில் திரியும் கால்நடைகளைப் பிடிக்க பொறிகளை நிறுவுவதும், பின்னர் அவற்றை கம்போங் தெபுக் ஜாவா, சபாக் பெர்ணமில் உள்ள தற்காலிக தடுப்புப் பகுதிக்கு மாற்றுவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சபாக் பெர்ணம் மாவட்டத்தில் மூன்று மாற்று இடங்களை கால்நடை வளர்ப்பு நடவடிக்கைக்காக மாநில அரசு முன்னர் முன்மொழிந்திருந்தது.
இருப்பினும், தோட்டப் பகுதியில் ஒத்துழைக்க மறுக்கும் மற்றும் சட்டவிரோதமாக தங்கள் நடவடிக்கைகளைத் தொடரும் கால்நடை வளர்ப்பாளர்கள் இன்னும் உள்ளனர்.
இது தொடர்பாக, தேவையற்ற சம்பவங்களைத் தவிர்க்க அப்பகுதியில் திரியும் கால்நடைகளுக்கு எதிராக சொந்த நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என்றும் ரிசாம் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
“சுதந்திரமாக விடப்படும் கால்நடைகள் தொடர்பான எந்தவொரு புகாரும், மேல் நடவடிக்கைக்காகப் பொறுப்பான அதிகாரிகளிடம் அனுப்பப்பட வேண்டும்.
"அதே நேரத்தில், வெளியேற்ற உத்தரவுகளுக்கு இணங்குவது உட்பட கால்நடை வளர்ப்பாளர்கள் அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்க வேண்டும்,
"உள்ளூர் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் பண்ணை நடவடிக்கைகள் பாதிக்காமல் இந்தப் பிரச்சனையை முறையாக தீர்க்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கு இந்த ஒத்துழைப்பு முக்கியமானது," என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் சபாக் பெர்ணம் மாவட்டம் மற்றும் நில அலுவலகம், சபாக் பெர்ணம் மாவட்ட கவுன்சில், காவல்துறை, சபாக் பெர்ணம் கால்நடை சேவைகள் அலுவலகம் மற்றும் கத்ரி எஸ்டி பண்ணையின் உதவி காவல்துறை ஆகியவை அடங்கும்.


