கோலாலம்பூர், பிப். 14 - தென் எல்லை மாநிலங்களில் அமைதிப்
பேச்சுகளை வழி நடத்துவதிலும் அங்கு நீடித்த அமைதி மற்றும்
நிலைத்தன்மையை உறுதி செய்வதிலும் மலேசியா ஆற்றி வரும் அரிய
பங்கினை தாய்லாந்து அங்கீகரிக்கிறது.
அந்த பிராந்தியதில் அமைதியை நிலைநாட்டுவதற்காக சமூக பொருளாதார
மேம்பாடு, பாதுகாப்பு பராமரிப்பு மற்றும் அமைதிப் பேச்சு ஆகிய மூன்று
அம்ச வியூகங்களுக்கு தனது அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாக
தாய்லாந்து பிரதமர் பாதோர்ங்தான் ஷினவார்த்தா கூறினார்.
இரு நாட்டு மக்களின் நலன் கருதி அமைதி மற்றும் பாதுகாப்பை நிலை
நிறுத்துவதிலும் நீடித்த அணுகுமுறையின் கீழ் அப்பகுதியை
மேம்படுத்துவதிலும் தாய்லாந்துக்கு ஆதரவாக இருந்து அமைதிப்
பேச்சுகளை வழிநடத்தும் ஒரே அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப்
பங்கேற்பாளராக மலேசியா விளங்குகிறது என அவர் சொன்னார்.
தென் எல்லை மாநிலங்களில் உகந்த சூழலை ஏற்படுத்துவதற்கு மலேசியா
மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளின் வாயிலாக அந்த பகுதியில்
வெகு விரைவில் நீடித்த அமைதி நிலவும் என நாங்கள் பெரிதும்
நம்புகிறோம் என அவர் பெர்னாமாவுக்கு அளித்த எழுத்துப்பூர்வப் பேட்டியில்
குறிப்பிட்டார்.
தென் 2004ஆம் ஆண்டு தென் மாநிலங்களில் தொடங்கி பல ஆண்டுகளாக
நீடித்து வரும் நெருக்கடிக்கு தீர்வு காணும் அமைதி முயற்சிகளை
முன்னின்று வழி நடத்தும பொறுப்பினை மலேசியா ஆற்றி வருகிறது.
தென் தாய்லாந்தில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக
அமைதிக்கான பரந்த கூட்டுத் திட்டத்தை உருவாக்க அரச தாய்லாந்து அமைதி கலந்துரையாடல் குழுவும் பி.ஆர்.என். எனப்படும் தேசிய புரட்சி முன்னணியும் கடந்த 2023ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டன.


