கோலாலம்பூர், பிப். 14 - நாட்டை ஊழலிலிருந்து காப்பாற்றி தூய்மையான மற்றும் உயர்நெறி கொண்ட நிர்வாக முறையை நிலைநிறுத்துவதில் அரசாங்கத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) விளங்குகிறது.
ஊழல் விவகாரத்தில் தனது தலைமையிலான மடாணி அரசாங்கம் ஒருபோதும் சமரசம் செய்யாது எனக் கூறிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அந்நோக்கத்திற்காக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் எதிராக தடையின்றி, அச்சமின்றி அல்லது பாகுபாடின்றி செயல்பட எம்.ஏ.சி.சி.க்கு முழு அதிகாரத்தையும் தாம் வழங்கியுள்ளதாகக் கூறினார்.
கட்டுப்பாடற்ற கொள்முதல் இனி அனுமதிக்கப்படக்கூடாது என்ற தெளிவான செய்தியை நான் வழங்கியுள்ளேன். தேடவும் அகற்றவும் நடவடிக்கை எடுக்கவும் எம்.ஏ.சி.சி. க்கு முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்
வெளியே மறுப்புகள், எதிர்ப்புகள் இருந்தாலும் இந்தக் கடினமான மற்றும் விரும்பத்தகாத பணியைச் செய்து வரும் எம்.ஏ.சி.சி. தலைமை மற்றும் குடும்பத்தினரின் மீது நான் மரியாதையுடன் இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
மலேசியாவில் ஊழல் பிரச்சினை வலுவாகவேரூன்றி கிட்டத்தட்ட ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நேற்றிரவு கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற எம்.ஏ.சி.சி.யின் சடங்குப்பூர்வ இரவு விருந்து 2025 நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி மற்றும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்பு ஊழல் தடுப்பு நிறுவனம் (ஏ.சி.ஏ.) என அழைக்கப்பட்ட எம்.ஏ.சி.சி. யுடன் தனக்கு சொந்த வரலாறு இருப்பதை ஒப்புக்கொண்ட அன்வார், ஊழலை ஒழிப்பது எளிதான காரியமல்ல என்றும் ஏனெனில் அமைப்பும் அரசியல் தலைமையும் சில நேரங்களில் இணக்கமாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.
பிரதமராக தனது கடமைகளைச் செய்யும் வரை, ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும் எதிர்காலத்தில் நாடு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திலிருந்து விடுபடுவதை உறுதி செய்வதாகவும் அன்வார் உறுதியளித்தார்.


