கோலாலம்பூர், பிப். 14 - சபா மற்றும் சரவாக்கில் இன்று காலை நிலவரப்படி வெள்ள நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. இரு மாநிலங்களிலும் உள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் 309 பேர் இன்னும் தங்கியுள்ளனர்.
சபா மாநிலத்தின் கினாபாத்தாங்கானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 குடும்பங்களைச் சேர்ந்த 107 ஆக உள்ளது. நேற்றிரவு 8.00 மணி முதல் இந்த எண்ணிக்கையில் மாற்றமில்லை என்று சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்தது.
கினாபாத்தாங்கானில் ஒரே நிவாரண மையம் மட்டுமே செயல்பட்டு வருவதாக அக்குழு தெரிவித்தது.
சரவாக் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஒரே பகுதியான மிரியில் இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் 202 பேர் இன்னும் தஞ்சமடைந்துள்ளனர்.
இன்று காலை 8.00 மணி நிலவரப்படி பெலுரு சமூக மண்டபத்தில் உள்ள நிவாரண மையத்தில் 137 பேரும் பகோங் பெலுரு தேசியப் பள்ளியில் உள்ள மையத்தில் 65 பேரும் வைக்கப்பட்டுள்ளதாக சரவாக் பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்தது.


