ஷா ஆலம், பிப். 14 - நிலங்களைப் பதிவு செய்யும் முறையில் சாத்தியமான
கசிவுகளை சரிபார்க்கும் அதேவேளையில் நில உரிமை மாற்ற
விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கண்டறியும்படி
மாநிலத்திலுள்ள அனைத்து நில மற்றும் மாவட்ட அலுவலகங்களும்
பணிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் நடைபெற்ற நில செயல்குழு கூட்டத்தில் இந்த உத்தரவை
தாம் பிறப்பித்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நில உரிமை மாற்றப் பணிகள் மரபுரீதியான முறையிலிருந்து இ-தானா
எனப்படும் மின்னியல் முறைக்கு மாறும் போது நிகழ்ந்த முறைகேடுகள்
தொடர்பில் அண்மையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதைத்
தொடர்ந்து இந்த உத்தரவை தாம் பிறப்பித்ததாக அவர் சொன்னார்.
எவ்வாறு கசிவுகள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிய அனைத்து
அம்சங்களையும் சரிபார்க்கும்படி மாவட்ட மற்றும் நில அலுவலகங்களை
நான் கேட்டுக் கொண்டுள்ளேன். ஏனென்றால், இத்தகையைச் செயல்கள்
இழப்புக்கு வழிவகுப்பதோடு நில உரிமை மாற்றம் மீது தவறான
எண்ணத்தை உண்டாக்குகின்றன என்று அவர் தெரிவித்தார்.
நேற்று அல்-ஹிஜ்ரா தொலைக்காட்சியில் இடம் பெற்ற சிறப்பு நிகழ்வில்
கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினார். இந்த நிகழ்வில்
பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ சம்சுல் இஸ்கந்தார் முகமது
அகினும் கலந்து பங்கேற்றார்.
மாநிலத்தின் முதன்மை வளமாக நிலம் விளங்குகிறது. இத்தகையச்
செயல்கள் இழப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி மாநில அரசு
அல்லது நில உரிமையாளர்களின் மேம்பாட்டு முயற்சிக்கும் பாதிப்பை
உண்டாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமான முறையில் நில உரிமை மாற்றங்களைச்
செய்தவர்களை கண்டறிவதற்காக தணிக்கை மற்றும் உள்விசாரணையை
அந்த அரசு நிறுவனம் மேற்கொள்ளும் என்று மந்திரி பெசார் முன்னதாகக்
கூறியிருந்தார்.
சட்டவிரோத நிலை உரிமை மாற்றத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில்
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கைகளில் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.


