குவாந்தான், பிப். 14 - இங்குள்ள தஞ்சோங் லும்பூர் பாலம் அருகே ஆற்றோரம் பெண் உணவு விற்பனையாளர் ஒருவரின் உடல் நேற்று கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் 12.45 மணிக்கு தமது துறைக்கு தகவல் கிடைத்தாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் வான் முகமது ஜஹாரி வான் புஸு ஒரு அறிக்கையில் கூறினார்.
அத்தகவலின் அடிப்படையில் தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையின் தடயவியல் உடற்கூறு நிபுணர்களுடன் போலீஸ் குழு இணைந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டபோது பெண்ணின் உடலில் குற்றச் செயல்களுக்கான கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.
உயிரிழந்தவர் குவாந்தான் மாவட்டத்தில் வசிக்கும் உணவு வியாபாரியான 37 வயது உள்ளூர் பெண் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்ட அப்பெண் கேஷ் ஆன் டெலிவரி (சி.ஓ.டி.) பரிவர்த்தனையை மேற்கொள்ள நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தது சாட்சிகள் வழங்கிய தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என அவர் மேலும் சொன்னார்.


