காஜாங், பிப். 14 - காஜாங் மருத்துவமனை தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் மருத்துவமனை என மறுபெயரிடப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற மருத்துவமனையின் மறுபெயரியிடும் நிகழ்வுக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் தலைமை தாங்கினார்.
சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகினும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வையொட்டி இந்த மருத்துவமனையின் மகளிர் மற்றும் சிறார் சிகிச்சை மையமும் (டபள்யு.சி.சி.) நேற்று திறப்பு விழா கண்டது. இம்மையம் கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி செயல்படத் தொடங்கியது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது, தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் மருத்துவமனை 17 சிறப்பு சேவைகளுடன் ஆண்டுதோறும் 28,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய நவீன வசதிகளைக் கொண்ட முக்கிய சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று கூறினார்.
இந்த மருத்துவமனை நான்காவது கிள்ளான் பள்ளத்தாக்கு கிளாஸ்டர் (திரட்டு) மருத்துவமனை திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனை முதன்மை கிளாஸ்டர் மருத்துவமனையாக உள்ளது.
மருத்துவ நிபுணர்களின் வழக்கமான வருகைகள் மற்றும் வளப் பகிர்வு மூலம் இம்மருத்துவமனை சிறப்பு நிபுணத்துவச் சேவைகளைப் பெறும் அதே வேளையில் நோயாளிகளுக்கான பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
டபள்யு.சி.சி குறித்து கருத்துரைத்த டாக்டர் ஜூல்கிப்ளி, நெரிசலைக் குறைப்பது, சிகிச்சைக்கான வாய்பினை விரிவுபடுத்துவது, நோயாளிகள் சிறந்த சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வது ஆகிய சுகாதார அமைச்சின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது என அவர் சொன்னார்.
இந்த ஒன்பது மாடி சிகிச்சை வளாகத்தில் 272 படுக்கைகள், 14 பிரசவ அறைகள், ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள், ஒரு கணினி டோமோகிராபி ஸ்கேன் மற்றும் குழந்தைகளுக்கான பல் மற்றும் ஆடியோலஜி சேவைகள் உள்ளன.
மொத்தம் 28.7 கோடி வெள்ளி செலவில் 5.43 ஹெக்டர் பரப்பளவில் இம்மருத்துவமனை
கட்டப்பட்டுள்ளது.


