கோலாலம்பூர், பிப். 13 - எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நெல்லுக்கான அடிப்படை கொள்முதல் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 1,300 வெள்ளியிலிருந்து 1,500 வெள்ளியாக உயர்த்தப்படும்.
ஊதியச் செலவுகள் அதிகரிப்பு, உரங்கள் மற்றும் களைக்கொல்லி போன்ற விவசாய உள்ளீடுகளின் விலை உயர்வு மற்றும் அரிசி உற்பத்திச் செலவுகளில் ஏற்பட்டத் தாக்கம் ஆகியவை சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.
அதே நேரத்தில் உள்ளூர் வெள்ளை அரிசியின் விலை ஒரு கிலோ 2.60 வெள்ளியாக நிலைநிறுத்தப்படும் என்றும் ஆறு மாத காலத்திற்கு உற்பத்தி செலவில் ஒரு பகுதியை அதாவது 15 கோடி வெள்ளியை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
சந்தையில் 10 கிலோ எடை கொண்ட சுமார் 2.4 கோடி வெள்ளை அரிசி பொட்டலங்கள் உள்ளூர் தேவைக்காக சந்தையில் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என அவர் சொன்னார்.
இதன் தொடர்பான அமலாக்க முறையை அமைச்சு தற்போது இறுதி செய்து வருகிறது. மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று இன்று மக்களவையில் நாட்டின் நெல் மற்றும் அரிசித் தொழில் துறையின் தற்போதைய நிலைமை குறித்து அமைச்சர்கள் விளக்க அமர்வின் போது அவர் கூறினார்.
தற்போது ஒரு மெட்ரிக் டன்னுக்கு 2,800 வெள்ளியாக இருக்கும் புதிதாக இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலையை மறுசீரமைப்பு செய்ய அமைச்சு தற்போது பாடிபெராஸ் நேஷனல் பெர்ஹாட் (பெர்னாஸ்) நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் முகமது சாபு கூறினார்.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்குவதற்கு இது வாய்ப்பினை ஏற்படுத்தும். மேலும் மக்களின் வாழ்க்கைச் செலவினத்தையும் குறைக்க முடியும் என்று அவர் சொன்னார்.
பூடி மடாணி திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் வேளாண் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் டீசல் மானிய உதவிக்கு தகுதி பெற அனுமதிக்க உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைமுறை அமைச்சு மற்றும் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை இறுதி செய்யும் பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


