கோலாலம்பூர், பிப் 13: மலேசியாவை கவர்ச்சிகரமான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த முதலீட்டு மையமாக மாற்ற அரசாங்கம் எப்போதும் புதிய முயற்சிகளை அடையாளம் கண்டு வருகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இடங்களில் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலமும் அடங்கும் என்று அவர் கூறினார்.
இது சிங்கப்பூரிடமிருந்து மட்டுமின்றி இதர வெளிநாடுகளிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என அவர் மக்களவையில் இன்று அமைச்சர்கள் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.
தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களான பெர்லிஸ், கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு மற்றும் தாய்லாந்தின் நான்கு தெற்கு மாநிலங்களும் வளர்ச்சியடைவதை உறுதி செய்யும் நோக்கிலான தாய்லாந்துடனான திட்டமும் எங்களிடம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
எங்களுக்கு இரண்டு கூட்டங்கள் உள்ளன. வரும் பிப்ரவரி 18ஆம் தேதி (மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில்) வளர்ச்சியைத் திட்டமிட ஒரு கூட்டத்தை நடத்துகிறேன் என்று அவர் சொன்னார்.
மலேசியாவை ஒரு கவர்ச்சிகரமான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த முதலீட்டு இடமாக நிலைநிறுத்துவதில் அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் ஊக்குவிப்புகள் குறித்து புக்கிட் பெண்டேரா தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் ஷியர்லீனா அப்துல் ரஷீட் எழுப்பிய துணைக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.


