ஷா ஆலம், பிப். 13 - சிலாங்கூரில் முன்பு பதிவு செய்யப்படாத தொலைத்தொடர்பு கோபுரங்களில் கிட்டத்தட்ட 99 விழுக்காட்டை மாநில அரசு வெற்றிகரமாக பதிவு செய்துள்ளது. இதன் வழி பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கூடுதல் வருமானம் அரசுக்கு கிடைத்துள்ளது.
மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட 3,644 சட்டவிரோத தொலைத்தொடர்பு கோபுரங்களில் 3,614 கோபுரங்களை மாநில அரசு இதுவரை பதிவு செய்துள்ளதாக இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் புத்தாக்கத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமது பாஹ்மி ங்கா கூறினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டிய 2,531 கோபுரங்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த நடவடிக்கை வழி ஏறக்குறைய 2 கோடியே 20 லட்சம் வெள்ளி வருமானத்தை ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்..
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள், அவர்களில் 97 விழுக்காட்டினரிடமிருந்து ஏறக்குறைய 2.2 கோடி வெள்ளியை நாங்கள் மீட்டுள்ளோம். அவர்கள் செலுத்தத் தவறியதால் முன்பு இத்தொகை அனைத்தும் இழந்த வருவாயாக இருந்தது. ஆனால், இப்போது நாங்கள் அவற்றை மீண்டும் அமைப்பு முறைக்குள் கொண்டு வந்துள்ளோம். மேலும் அவர்கள் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்திவிட்டனர் என்றார் அவர்.
இவை தவிர, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மற்றும் அமலாக்க நிறுவனங்களின் தரவைப் பயன்படுத்தி மற்றொரு சோதனை நடவடிக்கையைத் தாங்கள் மேற்கொண்டதாகவும் இதன் மூலம், அமைப்பில் இல்லாத மேலும் 1,113 கோபுரங்களைக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.


