ஷா ஆலம், பிப்.13 - அமைப்புகள் அல்லது குழுக்கள் அமைதியான முறையில் பேரணி நடத்துவதற்கு ஏதுவாக 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்டத்தில் (சட்டம் 736) திருத்தம் செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
இந்தச் சட்டத்தில் திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலம் பேரணியை நடத்தும் இடத்தின் உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தும் 11வது பிரிவு நீக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியதாகப் பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தின் வாயிலாக பேரணி நடைபெறும் இடத்தின் உரிமையாளரிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்ற 736வது சட்டத்தின் 11வது பிரிவு நீக்கப்பட்டு ரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த ஷரத்துதான் அமைதிப் பேரணி தொடர்பான சட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒன்றாக விளங்கி வந்தது.
போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் போக்குவரத்தை கண்காணிப்பதற்கும் ஏதுவாக அமைதிப் பேரணி தொடர்பில் ஐந்து நாட்களுக்கு முன்னர் காவல் துறையிடம் தகவல் தெரிவித்தால் போதுமானது என்று அவர் சொன்னார்.
இதன் மூலம், மாணவர்கள் பங்கேற்ற ஊழல் எதிர்ப்பு பேரணி தொடர்பான விசாரணை உட்பட முந்தைய விசாரணை நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்படுவதோடு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது என அன்வார் தெளிவுபடுத்தினார்.
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சொஸ்மா (பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) தொடர்பான உண்ணாவிரதம் மற்றும் மறியல் அல்லது ஆர்ப்பாட்டங்களுக்கும் இதுவே பொருந்தும். அவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அவர் இன்று மக்களவையில் அமைச்சரின் கேள்வி நேரத்தின் போது கூறினார்.


