கோலாலம்பூர், பிப். 13- பண்டார் புஞ்சாக் ஆலம், லோரோங் செகாரா பூர்ணாமாவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் அதிலிருந்து கிளம்பிய புகை சட்டவிரோதப் பிட்காயின் சுரங்க நடவடிக்கையை காவல்துறை கண்டுபிடிப்பதற்கு உதவியது.
வெடிப்பு மற்றும் புகை குறித்து உள்ளூர் பெண் ஒருவர் நேற்று காலை 11.41 மணிக்கு சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சௌஜானா உத்தாமா மற்றும் பெஸ்தாரி ஜெயாவைச் சேர்ந்த 14 தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது ஹபீஸ் முகமது கூறினார்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் ஆளில்லாத அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைய வேண்டியிருந்தது. அறை ஒன்றில் மாற்றியமைக்கப்பட்ட மின் இணைப்பு கம்பிகளால் தீவிபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது என அவர் சொன்னார்
தீ அணைக்கப்பட்ட பின்னர் மாலை 4.45 மணியளவில் காவல்துறை மற்றும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் பணியாளர்கள் அடங்கிய குழு வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியபோது பிட்காயின் சுரங்க நடவடிக்கைக்காக சட்டவிரோதமாக மின்சாரம் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலிருந்து பிட்காயின் தயாரிப்பு தொடர்பான பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறிய அவர், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427 மற்றும் 1990ஆம் ஆண்டு மின்சார விநியோகச் சட்டத்தின் 37(1)வது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது என்றார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை அல்லது உதவி விசாரணை அதிகாரி முகமது நூரிஸ்வான் ஹபீஸ் அப்துல் ஹலீமை 017-2494940 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு ஹபீஸ் கேட்டுக் கொண்டார்


