ஷா ஆலம், பிப் 13: அண்மையில் அறிவிக்கப்பட்ட மூன்று புதிய நிறுவனங்களுக்கு, பி.பி.கே.எம் எனப்படும் மோட்டார் வாகனப் பரிசோதனை சேவையை அமல்படுத்துதற்கான செயல்பாட்டு உரிமத்தை, போக்குவரத்து அமைச்சு இன்னும் வழங்கவில்லை.
அனைத்து நிறுவனங்களுக்கும் நிபந்தனைக்கு உட்பட்ட அனுமதி மட்டுமே வழங்கப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
2 ஆண்டுகளுக்குள் சாலைப் போக்குவரத்துத் துறை நிர்ணயித்திருக்கும் அனைத்துத் தேவைகளையும் அந்நிறுவனங்கள் தயார் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"அதை, ஜேபிஜே மூலமாகப் போக்குவரத்து அமைச்சு சோதனை செய்ய வேண்டும். அவர்கள் தேவையான அனைத்து வசதிகள், இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் கூறுகளை வழங்க முடிந்தால், செயல்பாட்டு உரிமம் வழங்கப்படும்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில், தொடங்கப்பட்டு ஒரு ஆண்டுக்கும் குறைவான காலகட்டம் மற்றும் மோட்டார் வாகனத் துறையில் பின்புலம் எதுவும் இல்லை என்று அவற்றின் நம்பகத்தன்மை குறித்து சில தரப்பினர் கேள்வி எழுப்பி வருவது குறித்தும் லோக் கருத்துரைத்தார்.
1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புஸ்பாகோம் எனப்படும் கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம், வாகனப் பரிசோதனையில் சந்தையை ஆக்கிரமித்த ஒரே நிறுவனமாக விளங்கினாலும், தொடக்கத்தில் பின்புலம் அல்லது அனுபவத்தை கொண்டிருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.


