ஷா ஆலம், பிப் 13 - சீனப் புத்தாண்டை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட
23வது ஓப் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்க காலத்தில் சிலாங்கூர்
மாநிலத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு விபத்துகளின்
எண்ணிக்கை 144 அல்லது 6.8 விழுக்காடு குறைந்துள்ளதாக சிலாங்கூர்
மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
ஓப் செலாமாட் 23 அமலாக்க காலக்கட்டத்தில் 1,980 சாலை விபத்துகள்
பதிவான வேளையில் கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் பதிவான
விபத்துகளின் எண்ணிக்கை 2,124ஆக இருந்தது என்று அவர் சொன்னார்.
அதே சமயம் கடந்த ஜனவரி 28 தொடங்கி பிப்ரவரி 2 வரை ஆறு
நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த சாலை பாதுகாப்பு இயக்கத்தின்
போது நிகழ்ந்த மரண விபத்துகளின் எண்ணிக்கையும் ஐந்து அல்லது 26.3
விழுக்காடு குறைந்து 14ஆகப் பதிவானது. கடந்தாண்டில் இந்த
எண்ணிக்கை 19 ஆக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஓப் செலாமாட் இயக்க காலத்தில் நிகழ்ந்த
சாலை விபத்துகளில் 22 பேர் பலியான வேளையில் இவ்வாண்டு அந்த
எண்ணிக்கை 14ஆகப் பதிவானது என்றார் அவர்.
இதனிடையே. இந்த 23வது ஓப் செலாமாட் நடவடிக்கையின் போது
பல்வேறு சாலைக் குற்றங்களுக்காக 23,962 குற்றப்பதிவுகள்
வெளியிடப்பட்டதாகவும் அவர் சொன்னார்


