கோலாலம்பூர், பிப். 13 - அதிகாரத் தரப்பினரிடம் அனுமதிக்கு
விண்ணப்பிக்காமல் பொது மக்கள் அமைதியான முறையில் பேரணியில்
ஈடுபடுவதற்கு ஏதுவாக 2012 அமைதிப் பேரணி சட்டத்தில் திருத்தம்
செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தயார் நிலை உள்ளிட்ட
விவகாரங்கள் இன்றைய மக்களைவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இன்றைய மக்களவைக் கூட்டத்தில் இடம் பெறும் அமைச்சர்கள் கேள்வி
பதில் நேரத்தின் போது இந்த கேள்வியை கோத்தா மலாக்கா உறுப்பினர்
கூ போய் தியோங் பிரதமரிடம் முன்வைப்பார்.
அண்மைய காலமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் தங்கள் வசம்
வைத்திருக்கும் பங்குகளை விற்பதற்கான காரணம் குறித்து மாச்சாங்
தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் வான் அகமது பைசால்
வான் அகமது கமால் பிரதமரிடம் வினவுவார்.
இக்கூட்டத் தொடரில் தற்போது அதிகரித்து வரும் இணைய சூதாட்ட
நடவடிக்கைகளை துடைத்தொழிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள்
குறித்தும் கேள்வியெழுப்பப்படும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக
கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்கத்தை மேற்கொள்வதில் இணையச்
சேவை வழங்குநர்கள் மற்றும் டிஜிட்டல் தள நடத்துநர்களின்
ஒத்துழைப்பை நாடுவது குறித்து பாடாங் ரெங்காஸ் தொகுதி
பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் கேப்டன் அஸ்ஹாரி ஹசான் தகவல்
தொடர்பு அமைச்சரிடம் வினா தொடுப்பார்.
அமைச்சர்கள் கேள்வி பதில் நேரத்திற்கு பின்னர் மாட்சிமை தங்கிய
பேரரசரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில்
உறுப்பினர்கள் கலந்து கொள்வர்.
இதனிடையே, நெல் மற்றும் அரிசி விலை மறுசீரமைப்பு தொடர்பில்
விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில்
செய்தியாளர் கூட்டத்தை நடத்தவிருக்கிறார்.


