கோலாலம்பூர், பிப் 12 – செத்தியா பெர்க்காசா வளாகத்தில் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) மகஜர் சமர்ப்பிக்கும் போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்திகளை உள்துறை அமைச்சு மறுத்துள்ளது.
1959 ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட பகுதிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட இடங்கள் சட்டத்தின்படி வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக மகஜர் வழங்க வந்த பங்கேற்பாளர்கள் காவல்துறையினரிடம் வாக்குமூலங்களை வழங்கும்படி மட்டுமே கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்று அது தெளிவுபடுத்தியது.
செத்தியா பெர்க்காசா வளாகத்திற்குள் நுழைவதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடிக்காத எந்தவொரு சம்பவம் தொடர்பிலும் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறையை காவல்துறை மேற்கொண்டதாக உள்துறை அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அமைச்சு வலியுறுத்தியதோடு தவறான தகவல்களைத் தவிர்க்க நம்பகமான ஆதாரங்களில் இருந்து தகவல்களைச் சரிபார்க்கும்படி சமூக ஊடக தரப்பினரை வலியுறுத்தியது. அதே நேரத்தில் 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தைப் பின்பற்றும்படியும் அது கேட்டுக்கொண்டது.
இதனிடையே, சுவாரா ராக்யாட் மலேசியா (சுவாராம்) நிர்வாக இயக்குநர் செவன் துரைசாமியிடம் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டதை புத்ரா ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் அய்டி முகமது ஷாம் உறுதிப்படுத்தினார்.
மேலும், அனுமதி இல்லாமல் உள்துறை அமைச்சின் வளாகத்திற்குள் நுழைந்ததற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறும் செய்திகளை அவர் மறுத்தார்.


