கோலாலம்பூர், பிப். 12- இரு வழி வர்த்தகத்தை ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக (US$1 = RM4.4680) உயர்த்தும் இலக்கை அடைய மலேசியாவும் துருக்கியும் செமிகண்டக்டர், விவசாய மூலப் பொருள்கள், மின்சாரம் மற்றும் மின்னியல், உணவு மற்றும் பானங்கள் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் 500 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டிய மலேசியாவுடனான தனது வர்த்தகத்தை 1,000 கோடி டாலராக இரட்டிப்பாக்க துருக்கி இலக்கு வைத்துள்ளதாக மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டிருந்த துருக்கிய அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன்
நேற்று கூறியிருந்தார்.
இந்த இலக்கு சவால்மிக்கது என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும் துருக்கி அதனை அடைவதை உறுதி செய்வதில் மலேசியா உதவ முடியும் என்று அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியா மற்றும் துருக்கி போன்ற வளரும் அல்லது வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் தங்கள் உள்-வர்த்தகத்தை அதிகரிக்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.
இதன் தொடர்பில் செமிகண்டக்டர்கள், வேளாண் மூலப் பொருள்கள், மின்சார, மின்னியல், உணவு மற்றும் பானங்கள் போன்ற பல்வேறு துறைகளில் நாம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அன்வார், பாதுகாப்புத் துறை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
நேற்று நேரடியாக ஒளிபரப்பப்பட்ட எர்டோகனுடனான செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இவ்வாறு கூறினார்.


