ஷா ஆலம், பிப். 11- மேற்கு கடற்கரை விரைவுச் சாலையிலிருந்து (டபள்யு.சி.இ.) ஷா ஆலம் விரைவுச் சாலை (கெசாஸ்) நோக்கிச் சென்று கொண்டிருந்த கொள்கலன் லோரி இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
லோரியின் இடிபாடுகளில் சுமார் இரண்டு மணி நேரம் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த 33 வயது ஓட்டுநர் தீயணைப்பு வீரர்கள் மீட்கும் தறுவாயில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பில் அதிகாலை 3.04 மணிக்கு தமது துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து
அண்டாலாஸ் மற்றும் ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
அந்த கொள்கலன் லோரி கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகக் கூறிய அவர், நடவடிக்கை கமாண்டரின் ஆரம்ப அறிக்கையின்படி இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட பாதிக்கப்பட்ட உள்நாட்டு ஆடவர் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது சுயநினைவுடன் இருந்ததும் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்ததும் தெரிய வந்தது என்றார்.
இருப்பினும், அதிகாலை 5.33 மணியளவில் வெற்றிகரமாக மீட்கப்பட்ட அந்த ஆடவரை சோதனை செய்த சுகாதார அமைச்சின் பணியாளர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


