கோலாலம்பூர், பிப். 11- அம்பாங், தாமான் செம்பாக்காவில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சனிக்கிழமை உரிய அனுமதி இல்லாமல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் சண்டை நிகழ்வதாக காவல்துறைக்கு புகார் கிடைத்ததைத் தொடர்ந்து போலீஸ் ரோந்துக் கார் அங்கு அனுப்பப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் கூறினார்.
மாலை 4.10 மணிக்கு அந்தப் பகுதிக்கு போலீசார் வந்தபோது, வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்திற்காக உள்நாட்டு வர்த்தகரான தன் காதலனுடன் சண்டையிட்டதாக ஒரு பிலிப்பைன்ஸ் பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார் என்று அவர்
சொன்னார்.
பின்னர் அந்தப் பெண் தன் காதலனிடம் ஒரு துப்பாக்கி இருப்பதாகத் கூறி ஒரு நீல நிற பிளாஸ்டிக் பையை காவல் துறை உறுப்பினர்களிடம் கொடுத்தார்.
அந்த பிளாஸ்டிக் பையை மேலும் ஆய்வு செய்தபோது, அதில் முப்பது 9மிமீ தோட்டாக்களும் ஒரு கைத்துப்பாக்கியும் இருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தொடர் விசாரணைக்காக 34 வயதுடைய அந்த ஆடவரும் பெண்ணும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 10,000 வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும்
1960 ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 8 இன் கீழ் விசாரணைக்காக சந்தேக நபர் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அந்தப் பெண் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அந்த நபர் ஆயுதம் வைத்திருப்பதற்கான நோக்கம் குறித்து போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர் என்று அஸாம் இஸ்மாயில் கூறினார்.


