கோலாலம்பூர், பிப். 11- சபா மற்றும் சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றிரவு 8.00 மணி நிலவரப்படி தற்காலிக நிவாரண மையங்களில் 2,039 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை இந்த எண்ணிக்கை 2,483 பேராக இருந்தது.
சபா மாநிலத்தில் 373 குடும்பங்களைச் சேர்ந்த 1,197 பேராக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை நேற்றிரவு 325 குடும்பங்களைச் சேர்ந்த 1,047 பேராக குறைந்துள்ளதாக சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.
பியூபோர்ட்டில் செயல்படும் மூன்று நிவாரண மையங்களில் மொத்தம் 685 பேரும் கினாபாத்தாங்கன் மாவட்டத்தில் உள்ள இரண்டு மையங்களில் 260 பேரும் மெம்பகுட் மாவட்டத்தில் உள்ள ஒரு மையத்தில் 102 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மெம்பகுட்டில் 13 கிராமங்கள், பியூபோர்ட்டில் மூன்று கிராமங்கள் மற்றும் கினாபாத்தாங்கனில் இரண்டு கிராமங்கள் உட்பட மொத்தம் 18 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரவாக்கில் , ஒன்பது நிவாரண மையங்களில் 1,286 பேர் துயர் துடைப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 992 ஆகக் குறைந்துள்ளது.
முக்காவில் அதிகபட்சமாக 438 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து மிரி (277), பிந்துலு (274) மற்றும் சிபு (மூன்று) ஆகிய இடங்கள் உள்ளதாகவும் சரவாக் பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.


