கோலாலம்பூர், பிப். 11 -- அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தும்போது தவறுதலாக ஆக்ஸிலேட்டர் பெடலை அழுத்தியதால் முதியவர் ஒருவர் செலுத்திய கார் கீழே விழுந்தது. இச்சம்பவத்தில் அந்த முதியவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் 78 வயது முதியவர் ஓட்டி வந்த புரோட்டான் சாகா கார் பங்சாபுரி ஸ்ரீ மலேசியாவின் மூன்றாவது மாடி வாகன நிறுத்துமிடத்தில் உள்ள சுவரில் மோதி கீழே விழுந்ததாக செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஐடில் போல்ஹாசன் தெரிவித்தார்.
அந்த முதியவர் சிறு காயங்களுடன் தப்பினார். சிகிச்சைக்காக அவர் வேந்தர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். உடனடி பழுதுபார்ப்பு பணிகளுக்காக
அந்தப் பகுதி கட்டிட நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வாகன நிறுத்துமிடத்திலிருந்து கார் கீழே விழுவதையும் அருகில் இருந்தவர்கள் ஓட்டுநருக்கு உதவுவதையும் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


