MEDIA STATEMENT

தைப்பூசம் மனவுறுதியின் அடையாளம்- ஒற்றுமை, பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது- பிரதமர்

11 பிப்ரவரி 2025, 3:25 AM
தைப்பூசம் மனவுறுதியின் அடையாளம்- ஒற்றுமை, பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது- பிரதமர்

கோலாலம்பூர், பிப். 11- நாட்டிலுள்ள இந்துக்களால் இன்று கொண்டாடப்படும் தைப்பூசப் பண்டிகையை முன்னிட்டு  அனைத்து இந்துக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர் அன்வார் இப்ராஹிம், ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தவும் பன்முகத்தன்மையைப் போற்றவும் அன்பை வலுப்படுத்தவும் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்துக்களைப் பொறுத்தவரை தைப்பூசம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. மாறாக, வாழ்க்கையின் சோதனைகளை எதிர்கொள்வதற்கான விடாமுயற்சி, உறுதிப்பாடு மற்றும் தியாகத்தின் சின்னமாகும் என்று அவர் கூறினார்.

வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதில் அவர்களின் உள்ளார்ந்த வலிமையையும் ஒழுக்கத்தையும் தைப்பூசம் பிரதிபலிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல

தைப்பூசம்  வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை எடுத்துக் காட்டுகிறது.

மரியாதை, ஒற்றுமை மற்றும் குடும்பவியல்  சூழலில் சமூகம் எவ்வாறு ஒன்று சேர முடியும் என்பதற்கு இது சான்றாகும்.

ஆயிரக்கணக்கான இந்துக்கள் வேண்டுதல்களை நிறைவேற்றவும் தியாகங்களைச் செய்யவும் கூடும்போது ​​கூட்டு வலிமையின் வெளிப்பாட்டைக் காண்கிறோம்.  மனிதநேயம், அன்பு மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றின் மதிப்புகளில் உறுதியாக நிற்கும் ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு இது என்று அவர் முகநூலில் வெளியிட்ட  ஒரு பதிவில் கூறினார்.

அதிகரித்து வரும் நிச்சயமற்ற உலகில் பரஸ்பர மரியாதை மற்றும் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை ஒற்றுமையின் தூணாக இருக்க வேண்டும் என்றும் அன்வார் கூறினார். இத்தகைய  மாறுபட்ட  கலாச்சாரங்கள் மற்றும் நடைமுறைகளின் தனித்துவத்தை ஒரு பலமாகக் கருத வேண்டுமே தவிர, பிரிக்கும் அல்லது பிளவுபடுத்தும் ஒரு அம்சமாக அல்ல எனவும் அவர் வலியுறுத்தினார்.

இத்தகையப்  பண்புகள் மலேசியாவை இந்தப் பிராந்தியத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மதிக்கப்படும் பாரம்பரியம் மற்றும் உன்னத மதிப்புக்கூறுகள் நிறைந்த நாடாக ஆக்குகிறது.

மலேசியர்கள் அதிர்ஷ்டசாலிகள், ஏனென்றால் அவர்கள் பன்முகத்தன்மையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அதை ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ளவும் நேசிக்கவும் பயன்படுத்தலாமே தவிர வெறுப்பைப் பரப்பவும் தூண்டவும் அல்ல என அவர் சொன்னார்.

வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி நல்லிணக்கக் கொள்கையை ஒதுக்கி வைத்தால்  நாடு அமைதியாகவும் முன்னேற்றமாகவும் இருக்காது. ஆகவே,  இது போன்ற ஒவ்வொரு வித்தியாசமான மற்றும் தனித்துவமான கொண்டாட்டமும் அமைதியை விரும்பும் மற்றும் சகவாழ்வு கொள்கையை நிலைநிறுத்தும் ஒவ்வொரு மலேசியராலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்என்று அவர் கூறினார்.

உண்மையில், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு மதிப்பதன் மூலம் மட்டுமே அனைவருக்கும் ஒரு நாகரீகமான, கண்ணியமான மற்றும் வளமான நாட்டின் உருவாக்கத்திற்கு  உத்தரவாதம் அளிக்க முடியும் என அன்வார் நினைவுபடுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.