கோம்பாக், பிப். 11- பக்தர்கள் தங்கள் சமய நம்பிக்கைக்கு ஏற்ப நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக சிலாங்கூரில் தைப்பூசம் உட்பட அனைத்து பண்டிகைகளும் எந்தவித இடையூறும் இல்லாமல் கொண்டாடப்படுகிறது.
பண்டிகை நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும் ஆலயங்கள், சீனக்கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் போன்ற முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதற்கும் மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும்
ஒரு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீட்டை வழங்குகிறது என்று மந்திரி புசார் கூறினார்.
சமயக் கொண்டாட்டங்கள் (இஸ்லாத்தின்) நம்பிக்கையைக் கைவிடாது. அது நமது சொந்த மதங்கள் மீதான நம்பிக்கையைத் தடுக்காது. ஆனால் நாம் அமைதியாக வாழவும் ஒற்றுமையுடன் ஒன்றுகூடவும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
ஆகவே, ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு இஸ்லாத்தின் அந்தஸ்துக்கு போதுமான ஒதுக்கீடுகளை வழங்கும் அதேவேளையில் ஆலயங்கள், சீனக் கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு ஆதரவையும் உரிய கவனிப்பையும் அளித்து அவற்றுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு பொருத்தமான இடங்களையும் உத்தரவாதங்களையும் வழங்குகிறது.
வழிபாட்டுத் தலத்தை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அது கலந்துரையாடல்கள் மூலம் ஒழுங்கான முறையில் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து தரப்பினரும் வழிபடுவதையும் தங்கள் நம்பிக்கைகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்கிறது என்று டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி கூறினார்.
நேற்றிரவு பத்து மலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் நடைபெற்ற மாநில நிலையிலான தைப்பூச கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மத வேறுபாடுகள் கொண்டாடப்பட வேண்டும். ஏனெனில் அது அமைதி, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை செலுத்தும் சூழ்நிலையைப் உருவாக்கும். இதன் மூலம் நாடு வளர்ச்சியடையும் என்றார் அவர்.
முஸ்லிம்கள் பிற மத விழாக்களில் கலந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கும் திட்டத்திற்கு தாம் உடன்படவில்லை என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார் என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.
தேசிய ஒற்றுமைக்காக மக்கள் நல்லிணக்கத்தை தீவிரமாக வலுப்படுத்திக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டது ஒரு பொருத்தமற்றது என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் தெரிவித்தார்.
முஸ்லிம் அல்லாதவர்களின் பண்டிகைகள் மற்றும் நல்லடக்கச் சடங்குகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது தொடர்பான வழிகாட்டுதல்களை மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை இறுதி செய்து வருவதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.


