புத்ராஜெயா, பிப். 10 - அரச மலேசிய சுங்கத் துறை (ஜே.கே.டி.எம்) அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களிடையே உயர்நெறியைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசாங்கம் ஊழல் நடவடிக்கைகளைப் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பதையும் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் நோக்கங்கள் தெளிவாக உள்ளதோடு ஊழல் நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் அந்தஸ்தை உயர்த்துவதற்கான முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்கள் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
எந்தவொரு தனிநபரும் ஒரு பொருட்டல்ல... துறையின் நற்பெயரை ஒருபோதும் கெடுக்கவோ மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அழிக்கவோ கூடாது என்று அவர் இன்று 43வது உலக சுங்க தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வழங்கிய உரையில் அவர் கூறினார்.
பிரதமரின் உரையை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் வாசித்தார்.
நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதிலும் தாயகத்தின் அமைதியைப் பேணுவதிலும் அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் மற்றும் தியாகங்கள் புரியும் அனைத்து சுங்கத் துறை ஊழியர்களுக்கும் அன்வார் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


