கோலாலம்பூர், பிப். 10 - செத்தியா ஆலமில் உள்ள பேரங்காடி ஒன்றில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்
சம்பந்தப்பட்ட ஆடவருடன் தொடர்புடைய நபர்களை கண்டறிவதில்
குற்றத் தடுப்பு புலனாய்வுத் துறை மற்றும் சிலாங்கூர் மாநில காவல்
துறைக்கு புக்கிட் அமான் போதைப் பொருள் குற்ற விசாரணைத் துறை
(என்.சி.ஐ.டி.) உதவும்.
சம்பந்தப்பட்ட நபர்களைத் கண்டறியும் முயற்சியில் என்.சி.ஐ.டி. தற்போது
ஈடுபட்டு வருவதாக அத்துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ காவ் சோக் சின்
கூறினார்.
குற்றத்தைப் புரியும் போது சம்பந்தப்பட்ட நபர் போதைப் பொருளைப்
பயன்படுத்தியிருந்தாரா என்பது அவரின் கைதுக்குப் பின்
மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனையில் மட்டுமே கண்டறிய
முடியும் என அவர் சொன்னார்.
தனது பொருள்களை அப்புறப்படுத்தும்படி விடுக்கப்பட்ட உத்தரவினால்
சினமடைந்ததாகக் கூறப்படும் அந்த சந்தேகபேர்வழி அந்த பேரங்காடியில்
எட்டு முறை துப்பாக்கி வேட்டு கிளப்பியது தொடக்கக்கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த ஆடவர் வெளிர் சரும நிறம் கொண்டவர் என்பதோடு போதைப்
பொருள் மற்றும் கிரிமினல் குற்றங்கள் தொடர்பில் 11 முந்தையக்
குற்றப்பதிவுகளையும் கொண்டுள்ளதாக காவல் துறையினர்
தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் 1971 ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின்
(அதிகரிக்கப்பட்ட தண்டனை) 3வது பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின்
307வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


