பட்டர்வொர்த், பிப். 10 - இரு வாரங்களுக்கு முன்னர் பெற்றத் தாயைப்
படுகொலை செய்ததாக மகன் மற்றும் அவரின் காதலி மீது இங்குள்ள
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் அய்னி அடிலா முகமது பைசால் முன்னிலையில்
தங்களுக்கு எதிராக குற்றச்சாட்ட்டு வாசிக்கப்பட்ட போது ஜே.அம்புரோஸ்
(வயது 24) மற்றும் அவரின் காதலியான எஸ். லதா (வயது 20) ஆகிய
இருவரும் அதனைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலையை
அசைத்தனர்.
கொலைக் குற்றச்சாட்டு உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது
என்பதால் குற்றஞ்சாட்டப்பட்ட இவரிடமும் வாக்குமூலம் பதிவு
செய்யப்படவில்லை.
கடந்த ஜனவரி 31ஆம் தேதி மாலை 6.43 மணிக்கும் இரவு 8.37 மணிக்கும்
இடையே பட்டர்வொர்த், பாகான் ஆஜாமில் உள்ள ஒரு வீட்டில் ஜேபி
வெர்ஜினி (வயது 60) என்ற மூதாட்டிக்கு மரணம் விளைவித்ததாக
அவ்விருவர் மீதும் கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை அல்லது நாற்பது
ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் குறைந்த பட்சம் 12
பிரம்படிகள் வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவு
மற்றும் அதே சட்டத்தின் 34வது பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியுள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் ஜாமீன் வழங்க முடியாத சட்டப்
பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதால் அவர்களுக்கு
ஜாமீன் வழங்க அரசுத் சார்பு வழக்கறிஞர் நுராமீரா ஷாருள் அஸ்ரின்
பரிந்துரைக்கவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் சார்பிலும் வழக்கறிஞர்
யாரும் ஆஜராகவில்லை.
இரசாயன மற்றும் சவப்பரிசோதனை அறிக்கையைப் பெறுவதற்கு
ஏதுவாக நீதிமன்றம் இந்த வழக்கை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு ஒத்தி
வைத்தது.


