நிபோங் திபால், பிப் 10: எந்தவொரு தனியார் அல்லது நிதி ஆலோசனை நிறுவனங்களும் பள்ளிகளுக்குள் நுழைந்து ஆசிரியர்களுக்கு கடனுதவி திட்டங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு ஒருபோதும் அனுமதித்ததில்லை.
இவ்விவகாரம் தொடர்பில் தமது தரப்பு தொடர் விசாரணையை மேற்கொண்டு வருவதாக அதன் அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்தார்.
இருப்பினும், அவர்கள் கல்வி அமைச்சிடமிருந்து அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெறாமல், தனிநபர்களிடமிருந்து அனுமதி பெற்று சென்றதற்கான சாத்தியக் கூறுகளை அவர் மறுக்கவில்லை.
எனவே, அவர்கள் எப்படி கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் நுழையலாம் என்பதை நாங்கள் கவனமாக ஆராய்ந்து வருகிறோம். அவர்கள் தனிப்பட்ட நபரின் அனுமதியில் வந்திருக்கலாம் தவிர அதிகாரப்பூர்வமாக வரவில்லை என்பதை நாங்கள் நம்புகிறோம்.
அதனால்தான், பள்ளி நிர்வாகிகள், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாநிலக் கல்வி துறை ஆகியவை முதலில் கல்வி அமைச்சிடம் அனுமதியை பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நிதி ஆலோசனை நிறுவனங்கள் ஆசிரியர்களை ஏஜெண்டுகளாக நியமித்துள்ளதாகவும், நிதி ஆலோசனைச் சந்திப்புகளுக்கு பள்ளிகளைப் பயன்படுத்துவதாகவும் வெளியான செய்திகளுக்குப் அவர் இவ்வாறு பதிலளித்தார்.


