புத்ராஜெயா, பிப். 10- வெள்ளத் தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற மக்கள் நலனுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
விரைவான முன்வரிசை நடைமுறையை அமல்படுத்தவதற்கு ஏதுவாக பொருளாதார அமைச்சுடன் இணைந்து நிதி ஒதுக்கீட்டிற்கான நிபந்தனைகளை தளர்த்தும்படி கருவூலத்தை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
குறிப்பாக, அதிக காலம் பிடிக்கக் கூடிய டெண்டர் முறைக்கு உட்பட்ட திட்டங்களும் இதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.
நாம் ஏன் டெண்டர் முறையை வலியுறுத்துகிறோம் என்றால் நேரடி பேர முறையை அமல்படுத்தும் பட்சத்தில் அதிக வீண் விரயங்கள் ஏற்படுகின்றன. ஆகவே. நாம் டெண்டர் முறையை அமல் செய்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால், டெண்டர் முறையை வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளும் போது அதிக காலம் தேவைப்படுகிறது. இத்தகைய சூழல்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலத்திற்கு காத்திருக்க முடியாத நிலை உண்டாகிறது என்று இன்று பிரதமர் துறை பணியாளர்களுடனான சந்திப்பு நிகழ்வின் போது அவர் தெரிவித்தார்.


