கோலாலம்பூர், பிப். 10- மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ளவிருக்கும் துருக்கிய அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன், இந்நாட்டை தனது முக்கிய விவேக பங்காளி என வர்ணித்துள்ளார். மேலும், உலக விவகாரங்களில் குறிப்பாக பாலஸ்தீன போராட்டத்தில் இரு தரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் தனது கடப்பாட்டையும் அவர் மறுவுறுதிப்படுத்தியுள்ளார்.
மலேசியா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானின் அழைப்பை ஏற்று நான்கு நாள் பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவிருக்கிறோம் என்று பயணத்தை மேற்கொள்ளும் முன் அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில் கூறினார்.
துருக்கிய மொழியில் எழுதப்பட்ட அப்பதிவில் இப்பயணம் தொடர்பான தனது எதிர்பார்ப்புகளையும் அந்த மூன்று நாடுகளுக்கான தனது பயணத்தின் முக்கியத்துவத்தையும் அவர் கோடிட்டு காட்டியுள்ளார்.
இந்த பயணத்தின் முதல் நாடாக கடந்த 2022 முதல் விரிவான விவேக பங்காளியாகவும் 2025 ஆசியான் தலைவராகவும் இருந்து வரும் மலேசியா விளங்குகிறது என அவர் சொன்னார்.
இந்த மூன்று நட்பு மற்றும் சகோதரத்துவ நாடுகளுக்கும் மேற்கொள்ளும் இப்பயணத்தின் போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவக்கூடிய மேலும் பல ஒப்பந்தங்களில் நாங்கள் கையெழுத்திடுவோம் என அவர் எர்டோகன் குறிப்பிட்டார்.
வர்த்தகம் மற்றும் பொருளதாரம் தவிர்த்து அனைத்துலக விவகாரங்களிலும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் கடப்பாட்டை மலேசியாவும் துருக்கியும் கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.
மலேசியாவுக்கான வருகையின் போது அனைத்துலக அரசதந்திர முயற்சிகளுக்கு அளித்து வரும் பங்களிப்புக்காக எர்டோகனுக்கு மலாயா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் விருது வழங்கப்படும்.


