மலாக்கா, பிப். 10- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 204வது கிலோ
மீட்டரின் வடக்கு தடத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி நிகழ்ந்த சாலை
விபத்தில் எழுவர் பலியாவதற்கு காரணமாக இருந்த லோரி நிறுவனம்
மீது அடுத்த மாதம் 4ஆம் தேதி அலோர் காஜா மாஜிஸ்திரேட்
நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
அந்நிறுவனத்திற்கு எதிராக 2010ஆம் ஆண்டு பொது தரைப் போக்குவரத்துச்
சட்டத்தின் (அபாட்) 57(1)(பி)(5) பிரிவின் கீழ் குற்றச்சாட்டு கொண்டு
வரப்படும் என்று மலாக்கா மாநில சாலை போக்குவரத்துத் துறை
(ஜே.பி.ஜே.) இயக்குநர் முகமது பிர்டாவுஸ் ஷாரிப் கூறினார்.
தூள் சிமெண்ட் ஏற்றிய அந்த செமி டாங்கர் டிரெய்லர் லோரியின்
உரிமையை ரத்து செய்வதற்கான விண்ணப்பமும் 2010 அபாட் சட்டத்தின்
80(4)வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் என அவர் சொன்னார்.
அனுமதிக்கப்பட்டதை விட 31 விழுக்காடு அதாவது 16,250 கிலோ கூடுதல்
எடையை ஏற்றியதற்காக இந்த குற்றச்சாட்டு கொண்டு வரப்படுகிறது
என்று நேற்று இங்குள்ள அலோர் காஜா-மலாக்கா தெங்கா-ஜாசின்
சாலையில் மேற்கொள்ளப்பட்ட சீனப்புத்தாண்டு சோதனை
நடவடிக்கையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
தெரிவித்தார்
வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 204வது கிலோ மீட்டரில் வடக்கு
நோக்கிச் செல்லும் தடத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நிகழ்ந்த
கோர விபத்தில் எழுவர் பலியானதோடு மேலும் பலர் காயமடைந்தனர்.
27 சுற்றுப்பயணிகள் பயணம் செய்த சுற்றுலா பேருந்து, இரு லோரிகள்.
ஒரு கார் . ஒரு பல்நோக்கு வாகனம் சம்பந்தப்பட்ட இந்த விபத்துக்கு
சம்பந்தப்பட்ட லோரின் சக்கரம் கழன்று சாலையில் விழுந்ததே காரணம்
என கூறப்படுகிறது.


