கோலாலம்பூர், பிப். 10 - கடந்த ஜனவரி 20 முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட
சீனப் புத்தாண்டு சிறப்பு சாலைப் போக்குவரத்து நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.) 107,014 குற்ற அறிக்கைகளை வெளியிட்டது.
இந்த நடவடிக்கையின் போது 429,423 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அவற்றில் 724 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜே பி ஜே. தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் ஃபாட்லி ராம்லி தெரிவித்தார்.
காலாவதியான சாலை வரி அல்லது வாகன காப்புறுதி இல்லாதது தொடர்பில் அதிகபட்சமாக 29,994 குற்ற அறிக்கைகளும் அதனைத் தொடர்ந்து காலாவதியானது அல்லது ஓட்டுநர் உரிமம் இல்லாதது தொடர்பில் 20,414 அறிக்கைகளும் டயர்கள் மற்றும் பிரேக்குகள் உட்பட தொழில்நுட்ப குற்றங்கள் தொடர்பில் 15,610 அறிக்கைகளும் வெளியிடப்பட்டன என அவர் சொன்னார்.
தங்கள் பயணங்களைத் தொடங்குவதற்கு முன் தங்கள் வாகனங்களைச் சரிபார்க்கும்படி அதன் உரிமையாளர்கள் நினைவூட்டப்படுகிறார்கள். ஏனெனில் இது மற்றவர்களின் வாழ்க்கையையும் உள்ளடக்கியது என்று அவர் நேற்று இங்குள்ள சுங்கை பீசி டோல் சாவடியில் இந்த சிறப்பு நடவடிக்கையின் நிறைவைக் குறிக்கும் சோதனையின் முடிவில் ஊடகங்களைச் சத்தித்தபோது அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையின் போது வெளியிடப்பட்ட குற்ற அறிக்கையின் எண்ணிக்கை கடந்தாண்டைவிட குறைத்துள்ளதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட குற்ற அறிக்கைகளின் எண்ணிக்கை 207,127ஆக இருந்த வேளையில் இவ்வாண்டு அது 107,014ஆக குறைந்துள்ளது என்றார்.
வாகனமோட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்த காரணத்தால் இவ்வாண்டு சீனப் புத்தாண்டு சோதனை நடவடிக்கைகளின் போது அமலாக்க நிறுவனங்கள் தங்கள் இலக்குகளை அடைய முடிந்ததாக அவர் கூறினார்.
கடந்த ஜனவரி 27 முதல் 28 மற்றும் பிப்ரவரி 1 முதல் 2 வரை நான்கு நாட்களுக்கு நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனத் தடை அமல்படுத்தப்பட்டதாகவும்
தடையை பின்பற்றத் தவறும் சரக்கு வாகனங்களுக்கு எதிராக 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 59 இன் கீழ் 21 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் சொன்னார்.


