கோலாலம்பூர், பிப். 10 - ஷா ஆலம், செத்தியா ஆலமில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு சந்தேக நபருக்குச் சொந்தமானப் பொருள்களை அகற்றும்படி துப்புரவுப் பணியாளர் உத்தரவிட்டதே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அந்தப் பேரங்காடியில் உள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த தனது பொருட்களை அப்பணியாளர் அகற்றச் சொன்னதால் கோபமடைந்தத அந்த ஆடவன் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜைன் கூறினார்.
முப்பது வயதுடைய உள்ளூர்வாசியான அந்த சந்தேகப்பேர்வழி போதைப்பொருள் பயன்பாடு காரணமாக அச்சமயம் அதிக போதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது என அவர் சொன்னார்.
இருப்பினும், உண்மையான நோக்கம் இன்னும் கண்டயறியப்படவில்லை என்று நேற்று விஸ்மா ரேடியோ ஆர்டிஎம்மில் நடைபெற்ற சீலாட் செகாக் புசாகா ஹனாஃபி அமைப்பின் 60 வது ஆண்டு நிறைவு விழாவில் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சிலுடன் கலந்து கொண்டப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
நேற்று முன்தினம் இரவு 10.50 மணியளவில் செத்தியா ஆலமில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் துப்புரவுப் பணியாளரைச் சுட்டுக் காயப்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புக்கிட் அமான் உதவியுடன் சிலாங்கூர் மாநில காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும், இந்த வழக்கு விரைவில் தீர்க்கப்படும் என்று தாங்கள் நம்புவதாகவும் சுஹைலி தெரிவித்தார்.
வெளிர் சரும நிறம் கொண்ட சந்தேக நபருக்கு போதைப்பொருள் மற்றும் குற்றங்களுடன் தொடர்புடைய 11 முந்தைய பதிவுகளும் இருப்பதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் முன்னதாகக் கூறியிருந்தார்.


