ஈப்போ, பிப். 9- சீனப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த மாதம் 20ஆம் தேதி
தொடங்கி பேராக் மாநில சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.)
மேற்கொண்ட சிறப்பு மோட்டார் சைக்கிள் சோதனை நடவடிக்கையில்
மொத்தம் 24,494 மோட்டார் சைக்கிள்கள் பரிசோதிக்கப்பட்ட வேளையில்
அவற்றில் 143 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சோதனையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 2,511 மோட்டார்
சைக்கிள்களுக்கு 6,039 ஜேபிஜே(பி)22 குற்ற அறிக்கைகள்
வெளியிடப்பட்டன என்று பேராக் மாநில ஜே.பி.ஜே. இயக்குநர் முகமது
யூசுப் அபுஸ்தான் கூறினார்.
இச்சோதனையில் வாகனமோட்டும் லைசென்ஸ் மற்றும் சாலை வரி
இல்லாதது தவிர்த்து வாகன எண் பட்டைகள் விதிமுறைக்கு ஏற்ப இல்லா
தது உள்ளிட்ட குற்றங்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டதாக அவர்
சொன்னார்.
பதினெட்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்த சீனப்புத்தாண்டு சோதனை
நடவடிக்கை வாகனமோட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில
பெரிதும் துணை புரிந்துள்ளது. கடந்தாண்டு வெளியிட்டப்பட்ட 7,383 குற்ற
அறிக்கைகளுடன் ஒப்பிடுகையில் இது 20 விழுக்காட்டு வீழ்ச்சியை
காட்டுகிறது என்றார் அவர்.
மோட்டார் சைக்கிளோட்டிகள் மத்தியில் சாலை பாதுகாப்பு தொடர்பான
விழிப்புணர்வு அதிகரித்துள்ளதை இந்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன
என்று நேற்றிரவு இங்குள்ள ஜாலான் சுல்தான் இஸ்கந்தாரில்
மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைக்குப் பின் செய்தியாளர்களிடம்
அவர் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்து குற்றங்கள், சட்டவிரோதப் பந்தயம், மோட்டார்
சைக்கிள்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட குற்றங்களை இலக்காக
கொண்ட இந்த சோதனை இயக்கம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது என
அவர் குறிப்பிட்டார்.


