கோலாலம்பூர், பிப். 9- சொஸ்மா எனப்படும் 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றச் சட்டத்தின் (சிறப்பு நடவடிக்கைகள்) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் என நம்பப்படும் சிலர் சுங்கை பூலோ சிறைச்சாலை எதிரே மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு கொண்டது தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.
சிறார்கள் உள்பட 40 முதல் 50 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 8.10 மணியளவில் கையில் பதாகைகளை ஏந்திய மறியலில் ஈடுபட்டது தங்களின் கவனத்திற்கு வந்துள்ளதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது ஹாபிஷ் முகமது நோர் கூறினார்.
சொஸ்மா சட்டத்தை அகற்றக் கோரி அரசாங்கத்திற்கு நெருக்குதல் தருவது அவர்கள் மறியலில் ஈடுபட்டதற்கான காரணம் என்பது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மறியலில் ஈடுபட்டவர்கள் சொஸ்மா சட்டத்தின் கீழ் சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் என சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இத்தகைய பேரணி தொடர்பில் காவல் துறைக்கு முன்கூட்டியே அறிக்கை சமர்பிக்கப்படாத பட்சத்தில் இந்த மறியலிலை ஏற்பாடு செய்தவர்களுக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த மறியல் தொடர்பில் தகவலறிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நுர்லியானா ஷாரிபுடினை 010-8435654 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையங்களைத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
கைதிகளைக் காண்பதற்கான விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டதை கண்டித்தும் சொஸ்மா சட்டத்தை அகற்றக் கோரியும் சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் குடும்பத்தினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.


