காஸா, பிப். 9- கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் தொடங்கியதிலிருந்து காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48,181 பேராக உயர்ந்துள்ளதாக காஸா பகுதியில் உள்ள மருத்துவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
உயிரிழந்தோரில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர். அதே சமயம், இப்போரில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 111,163 ஆக அதிகரித்துள்ளதாக பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனமான வாஃபா கூறியது.
கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மேலும் 26 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளின்போது இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 22 உடல்களும் அதில் அடங்கும்.
காஸா முழுவதும் வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படும் நூற்றுக்கணக்கான நபர்கள் இன்னும் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது.
பரவலான அழிவு மற்றும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதில் ஆம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன.
காஸாவில் மனிதாபிமான நெருக்கடி ஒவ்வொரு மணி நேரமும் மோசமடைந்து வருகிறது. அப்பகுதியில் மருத்துவப் பொருட்கள், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


