கோலாலம்பூர், பிப். 9- நாட்டு மக்கள் சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து நாடு தற்போது அனுபவித்து வரும் அமைதியை தொடர்ந்து தற்காக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
நேற்று, இங்குள்ள பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தில் மலேசியா சாரோங் இசை ஓட்டம் 2025 நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து உரையாற்றிய அவர், இந்த நிகழ்வு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது மக்களிடையே நட்புறவை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
சாரோங் (கைலி) சொந்த கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. இது பிரசித்தி பெற்றது. இது மலாய் பகுதி முழுவதும் பிரபலமானது. எனவே உங்களிடம் ஒரு சாரோங் இருந்தால் அதனை அணியுங்கள். உங்களிடம் இல்லை என்றால் பரவாயில்லை. உணர்வுதான் முக்கியமானது என அவர் குறிப்பிட்டார்.
அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்யுங்கள். நாடு அமைதியுடன் இருக்கிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. நமது நாட்டின் பாதுகாப்பை யாரும் சீர்குலைக்க நாம் அனுமதிக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் ஆடாம் அட்லி அப்துல் ஹலிம் மற்றும் கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ டாக்டர் மைமுனா முகமட் ஷெரீப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விளையாட்டு உடை அணிந்து சரோங்கை தோளின் குறுக்கே அணிந்திருந்த அன்வார், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் சுமார் மூன்று கிலோமீட்டர் நடைப்பயணத்தில் பங்கேற்றார்
கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பது மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த மலேசியா சாரோங் இசை ஓட்டம் 2025 நிகழ்வில் 10,500 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதாக ஏற்பாட்டுக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்தது.


