கோலாலம்பூர், பிப் 8: 13வது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு முகவராக செயல்படுவதற்கான பரிந்துரையை இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா பொருளாதார அமைச்சிடம் முன் வைத்துள்ளது.
இப்பரிந்துரையை பொருளாதார அமைச்சரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரக்பிசி ரம்லியை சந்திப்பதற்கு தமது தரப்பு காத்திருப்பதாக மித்ராவில் சிறப்பு செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் தெரிவித்தார்.
மித்ராவிற்கு இந்தியர்களுக்கான சலுகைகளைப் பகிர்ந்து வழங்குவதில் கண்காணிக்கும் நடவடிக்கை மேற்கொண்டால் அரசாங்கம் மூலம் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.
இந்திய சமுதாயத்திற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க கடந்த ஆண்டு இறுதியில் தொழில் வல்லுநர்கள், பங்குதார்கள் என்று பல தரப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அதில் இவ்விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் கூறினார்.
அதில் விவாதிக்கப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் பொருளாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சிறுபான்மையினருக்கு ஆணையத்தை உருவாக்குவதும் இப்பரிந்துரைகளில் அடங்கும். இதன் வழி, இந்திய சமூகம், பூர்வக் குடியினர் உட்பட மலேசியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு அரசாங்கங்களின் உதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய முடியும் என்று பிரபாகரன் தெரிவித்தார்.


